Archive for ஒக்ரோபர், 2008
ஈழமக்களின் விடுதலை நாளே எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்
மதுரை நடுவண் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவரும் இன்று பிணையில் விடுதலையாகி வெளியே வந்தனர்.
அவர்களை இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 19-ந் தேதி இராமேசுவரத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய இறையாண் மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தும் பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீரை இராமநாதபுரம் Q பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மதுரை நடுவண் சிறைச்சாலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரின் சார்பில் பிணை கேட்டு கடந்த 28-ந் திகதி இராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 3.30 மணியளவில் இந்த மனு நீதிபதி மாயாண்டி முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இருவரின் பேச்சால் சமுதாயத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடவில்லை. எனவே இரண்டு பேரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை தருமாறு கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு நபர் பிணை செலுத்தும்படியும், நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, இருவருக்கும் பிணை வழங்கினார். மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் மதுரை ஒன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தார். பிணை உத்தரவு நேற்று இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகிய இருவரும் சிறையி லிருந்து விடுதலை ஆனார்கள். மதுரை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த அவர்கள் இருவரையும் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தோழர்கள் ஆகியோர் வரவேற்றனர். சிறையிலிருந்து வெளியே வந்த சீமானும், அமீரும் இந்த பிரச்சனையின் போது, தங்களுக்கு பின்னால் நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று தெரிவித்தனர்.
மதுரை சிறையிலிருந்து நாங்கள் விடுதலையானது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று நினைத்தால் அது தவறு. எப்பொழுது ஈழமக்கள் விடுதலை அடைவார்களோ அன்றுதான் எங்களுக்கு மகிழ்ச்சி என்று இயக்குநர்கள் இருவரும் கூறினார்கள்.
பிணையில் விடுதலையான இருவரும் விரைவில் வழக்கில் இருந்தும் விடுதலையாவார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குனர் சீமான் இளையான்குடியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து மதுரை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போடுவார். அதே போன்று மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்கும் அமீரும் நீதிமன்றத்தில் கையெழுத்திடுவார்.
வானூர்திகள் குண்டுத்தாக்குதல்
தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதேநேரம், கொழும்பின் புறநகர்ப்பகுதியான களனி திசவில் அமைந்துள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் இன்றிரவு 11:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுகளை வீசியுள்ளது
விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தியின் தாக்குதலினால் களனி திச மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிவதாகவும் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வானூர்தி தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபுபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
தகவல் : http://www.puthinam.com/full.php?2eVRqG00bPg4b2edRAbK3bcc8Ib4d4G3c3cc28mM2d433XC3b02uPX3e
இயக்குநர்கள் சீமான், அமீர் கைது ஏன்?: டிஜிபி விளக்கம்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக புகார் வந்ததால் இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டதாக டிஜிபி ஜெயின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 19.10.2008 அன்று ராமேஸ்வரத்தில், தமிழ் திரை உலக தமிழின உணர்வுக் குழுவின் சார்பில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
அப்பொதுக் கூட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய அரசின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் பேசினார்கள்.
அவர்களது பேச்சுக்கள் சட்ட விரோதமாக இருந்தபடியால் இதுகுறித்து 24.10.2008 அன்று ராமநாதபுரம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை இ.பி.கோ 124ஏ (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல்), 153ஏ(1), பி (பிரிவினைவாதத்தை தூண்டுதல்) மற்றும் சட்டவிரோத நடவடிக்ைககள் தடுப்புச் சட்டப் பிரிவு 13 (1) பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சீமான் கைது – உறுதி
சீமான் & அமிர் கைது செய்யப்பட்டதாக செய்தி ஊடகங்கள் கூறுகின்றன
இயக்குனர் சீமான் கைது
சீமான் கைது செய்யப்பட போகிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.
பாரதிராஜா கைதாவாரா?
அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது
கொட்டும் மழையில் மனித சங்கிலி – 1
பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.
மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திரண்டு மழையையே அதிர வைத்தனர்.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிகளாக அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் நிற்க வேண்டியவர்கள் பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப மனித சங்கிலியில் அனைவரும் பங்கேற்றனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. கருணாநிதி கார் மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.
அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மனித சங்கிலி அணிவகுப்புக்கு பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அணிவகுப்பிலும் கலந்து கொண்டன.
–
மேலும் சில புகைப்படங்கள்
http://files.periyar.org.in/viduthalai/Slideshow/chain/Ealathamilar_Manithasangili.htm
சீமான் எழிச்சி உரை காணொளி (ராமேஸ்வரம்)
சீமான் எழிச்சி உரை பகுதி – 1
–
சீமான் எழிச்சி உரை பகுதி – 2
–
சீமான் எழிச்சி உரை பகுதி – 3
தங்கபாலு மீது சீமான் பாய்ச்சல்; விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதா?
மாலைமலர்-
சென்னை, அக். 23-
இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து டைரக்டர் சீமான் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.
ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?
பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.
தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?
தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும். சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.
தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.
இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?
நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம். பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.
எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.
உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.