என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!

பிப்ரவரி 2, 2009 at 8:03 பிப 5 பின்னூட்டங்கள்

p65”என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!” : சீமானின் கோபம்! -ஆனந்த விகடன் நேர்காணல்.

சீமான்… காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்!

”சிறை அனுபவம்..?”

”வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். ‘சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க’ என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சிறையில் இருந்தது என்னுடைய பேறு!”

”காங்கிரஸ் கட்சி உங்கள் மீது அதிகப்படியான கோபத்தைக் காட்டுகிறதே?”

”அதைவிட அவர்கள் மீது எனக்கு அதிகக் கோபம் இருக்கிறது. சில கல் தொலைவில் என் உறவுகள் கஞ்சிக்குச் செத்து, காட்டுக்குள் தஞ்சம் புகுந்து, எப்போது தலையில் குண்டு விழுமோ என்று தவித்துக்கிடக்கும் சோகத்தை, மேடை போட்டுச் சொல்கிற சீமான் பயங்கரவாதியாம். என் வீட்டு வாசலில் நின்ற காரைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடிய காங்கிரஸ் காரர்கள் மிதவாதிகளாம். நான் பேசும் கருத்து தவறு என்றால், நீயே மேடை போடு. நான் வருகிறேன். பதில் சொல். அதை விட்டுவிட்டு காரைக் கொளுத்துவது, கைது செய்யச் சொல்லி ஈனஸ்வரத்தில் சுப்ரபாதம் பாடுவதெல்லாம் பாரம்பரியக் கட்சிக்கு அழகா?

என் அப்பனும் ஆத்தாளும் காலங்காலமாக ஓட்டுப் போட்ட சின்னம் கை சின்னம். எனக்கு யாரும் தேசியத்தைக் கற்றுத்தர வேண்டியதில்லை. எனது சொந்தங்களில் பலர் எல்லையைக் காக்க நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தேசபக்தியைக் கற்றுத் தரும் காங்கிரஸ்காரர்கள் வீட்டில் எத்தனை பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள்? பட்டியல் தருமா சத்தியமூர்த்தி பவன்? 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத இயலாமையில் புலம்புகிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!”

‘ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?”

”ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?”

”அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?”

”தேவையானதைத்தான் நான் பேசுகிறேன். ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி பேசினால் அமைதிப் படையின் கொடுமைகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். அதை எம் தமிழன் ஏற்பதால்தானே ஆயிரக்கணக்கில் கூடுகிறான்? என் குரலுக்கு மரியாதை இல்லையென்றால், பொருட்படுத்த வேண்டாம். ஏன் ‘கைது செய், கைது செய்’ என்று கத்துகிறீர்கள். என் பேச்சு, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா? எனக்கு அவ்வளவு செல்வாக்கா? காங்கிரஸ் சொன்ன பிறகுதானே எனது பலம் எனக்குத் தெரிகிறது.”

”வெறுமனே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதால் என்ன லாபம் என்கிறார்களே?”

”உணர்ச்சி இருப்பதால் வயப்படுகிறேன். இல்லாதவர்கள் என்னைத் திட்டுகிறார்கள். பேசாமல் எனது பிரச்னையை எப்படிச் சொல்ல முடியும்! இலங்கை ஜனநாயக நாடல்ல, அது மதச் சர்வாதிகார நாடு என்று எடுத்துச்சொல்வது உணர்ச்சிவயப்படுவதா? அறிவும், ஆற்றலும், புலமையும், திறமையும் வாய்ந்த தமிழ்த் தலைவர்களை ஒரு காட்டுமிராண்டி, கோமாளி என்று திட்டும்போது உணர்ச்சியற்ற பிண்டமாக என்னால் இருக்க முடியாது.”

”இலங்கையை மதச் சர்வாதிகார நாடு என்றீர்கள். அங்கு பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று சொல்லி பாரதிய ஜனதா ஆதரவு தெரிவிப்பதை ஏற்கிறீர்களா?”

”நான் சாதி, மதத்துக்கு எதிரானவன். ஆனால், என் இனத்தவன் சாகும்போது அவனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை என்னால் புறந்தள்ள முடியாது. காங்கிரஸ் செய்யத் தவறியதை, இல.கணேசன் சொல்லி வருவது வரவேற்கத்தக்கது.”

‘ஒரு சினிமாக்காரர் தனது படங்களின் மூலம் பேசப்படுவதைத் தாண்டி, அதீத அரசியல் ஆர்வம்கொள்வது சரியா?”

”நான் என் சுயநலத்துக்காகவோ, எனக்கு ஓட்டு கேட்டோ பேசவில்லை. என் இனத்துக்காகப் பேசுகிறேன். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், பிரபாகரனைப் படித்த என்னால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இலங்கை நிலவரங்களை நினைத்தால் கண்மூடித் தூங்க முடியவில்லை. படம் எடுப்பதுதான் என் தொழில். ஆனால், தமிழன் அல்லல்படும்போது படம் எடுத்துக்கொண்டு இருக்க முடியாது. இதையெல்லாம் பேசுவதால் என் தொழில் பின்னடைவு ஆவது உண்மைதான். என் நண்பர்களே என்னிடம் பேசப் பயப்படுகிறார்கள். 32 நாட்களாகப் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. என் உணர்வு அறிந்த தம்பிகள் என்பதால் காத்திருந்தார்கள்.

பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சொந்த ஊரில் ஒரு வீடு கட்டித் தரக் கேட்கிறாள் என் தாய். அண்ணன் பிரபாகரன் நாடு கேட்டுப் போராடுகிறான். என் தாய் வீடு கேட்டுப் போராடுகிறாள். இதற்கு மத்தியில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. சராசரியாக வாழ்ந்து செத்துப் போக விரும்பவில்லை இந்தச் சீமான்.”

”அடுத்த படம்..?”

”சில வாரங்களில் ஆரம்பமாகிறது. பெயர்: சீமானின் ‘கோபம்’!” – சிரித்தபடி முடிக்கிறார் சீமான்!

நன்றி: ஆனந்த விகடன்.

Entry filed under: பேட்டி.

கோவை சிறையில் இருந்து பிணையில் விடுதலையான சீமான் உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள் – சீமான்

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Muthukumar  |  10:13 பிப இல் பிப்ரவரி 2, 2009

  பேட்டி சிறப்பாக இருக்கிறது. “கேட்கிறார்களே, சொல்கிறார்களே” என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக கூறினாலும், பதில் ஒன்றே.

  >> ”அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?” <> ‘‘ஒரு சினிமாக்காரர் தனது படங்களின் மூலம் பேசப்படுவதைத் தாண்டி, அதீத அரசியல் ஆர்வம்கொள்வது சரியா?” <<

  இதைவிட ஒரு முட்டாள்தனமாக கேள்வி இருக்க முடியாது. ஆண்டாண்டு காலமாக திரைத்துறையினர் ஆழ்ந்த அரசியல் அறிவு இல்லாமல் இருப்பதாலேயே அறிவுள்ளவர்கள் அரசியல் ஆர்வம் கொள்வதில் என்ன பிழை ?

  திரைத்துறையினரென்றால் தீட்டுப்பட்டவர்களா ? அல்லது இன்னின்னார்தான் அரசியலார்வம் கொள்ளலாம் என்று அரசியலமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளதா ? இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் அரசியல் ஆர்வம் கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு.

  ஒரு சிக்கலான சூழலில்கூட நமக்கிடையே ஒற்றுமையின்றி, சுண்டைக்காய் தேசத்து ராணுவ தளபதி நமது மாநில அரசியல்வாதிகளை ‘அரசியல் கோமாளி’ என்று கொழுப்பெடுத்து கொக்கரிக்கவிட்டிருக்கிறோம்.

  என்னதான் நமக்குள் ஆயிரம் அரசியல் வேறுபாடுகள் இருப்பினும் அவனை ஒருமித்த குரலில் கண்டித்திருந்தால்; மத்தியில் ஆண்டுகொண்டிருக்கும் கட்சியின் மாநில பிரதிநிதிகள் என்ற தகுதியில் முதல் குரலில் கண்டனம் எழுப்பியிருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால் அப்போது முதுகை காட்டிக்கொண்டிருந்துவிட்டு – அவனுக்கு உரிமம் தந்தது போல – இப்போது உணர்ச்சிவயப்பட்டு பேசுகிறார் என்றால் ?

  சொரணை உள்ளவன் பேசத்தான் செய்வான். இல்லாதவர்கள் பொத்திக்கொண்டு மட்டும் இருக்கட்டும்.

  ஒன்று நிச்சயம், இப்போது கையாலாகாத நிலையில் தள்ளப்பட்டிருக்கும் தமிழகம் தன் வரலாற்றை கண்ணீரோடும் அதே கையறுநிலையோடும் பதிவு செய்யும். அதில் இவர்களது இடம் எங்கே என்று அவர்களுக்கே புரியும், அந்தரங்கமாகவேனும்.

  வேதனையும் ஆதங்கமுமாய்
  பொன்.முத்துக்குமார்

  மறுமொழி
 • 2. Muthukumar  |  10:22 பிப இல் பிப்ரவரி 2, 2009

  பின்வரும் பின்னூட்டம் சரியாக பதிவாகவில்லை :

  >> ”அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?” <<

  நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத்திறத்தோடும் இவர்கள் அமைதிப்படை விவகாரத்தை விவாதிக்க முன்வந்தால் ஏன் அதை "கிளப்ப" போகிறார்கள் ?

  அமைதிப்படை விவகாரத்தை மட்டும் பேசவே மாட்டோம்; ஆனால் ராஜீவ் படுகொலை விவகாரத்தை மட்டும் உரக்கப்பேசி வாயடைக்க வைப்போம் என்றால் எப்படி ? அமைதிப்படை விவகாரம் அப்படியென்ன பேசப்படவே கூடாத மகா புனித விஷயமா ? ஏன் இந்த "Holier than thou" மனப்பான்மை ?

  அமைதிப்படை விவகாரம் "கிளப்பப்டுவதாக" கூறினால் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் "பிடித்து தொங்கப்பட்டுக்கொண்டு" இருப்பதாகவும் கூறலாம்.

  மறுமொழி
 • 3. periyarpithan  |  5:20 முப இல் பிப்ரவரி 3, 2009

  //உணர்ச்சி இருப்பதால் வயப்படுகிறேன்// நான் பேசும் கருத்து தவறு என்றால், நீயே மேடை போடு. நான் வருகிறேன். பதில் சொல். அதை விட்டுவிட்டு காரைக் கொளுத்துவது, கைது செய்யச் சொல்லி ஈனஸ்வரத்தில் சுப்ரபாதம் பாடுவதெல்லாம் பாரம்பரியக் கட்சிக்கு அழகா?// பேச்சில் உண்மையும், நேர்மையும் இருப்பதால் நீ மேடைபோடு நான் வருகிறேன் எனக்கூறுகிறீர்கள்.
  கேள்விக்கு பதில் சொல்லுகிற துணிவும்,தெளிவும் இருந்தால் ஏன் கத்தப்போகிறான். http://muzhangu.wordpress.com/

  மறுமொழி
 • 4. Tamil magal  |  6:53 முப இல் பிப்ரவரி 3, 2009

  ஒவ்வொரு தமிழனும் சொல்ல துடிக்கும் வார்த்தைகள் தான் சீமான் பேசியது.ராஜிவ்காந்தி கொலைக்காக தமிழ் இனம் சாகலாம் என்றல் இந்திராகாந்தி கொலைக்காக யாரை பழிவாங்கினார்கள்?

  இதில் சிங்கள தமழர்க்காக பேசாமல் கட்சிக்காக பேசுபவர்கள் எல்லாம் நிச்சயமாக தமிழின துரோகிகள்.

  இன்று இலங்கையில் தமிழர்க்கு நடந்தது நாளை இந்தியாவில் நமக்கு நடந்தால் அதற்கும் ராஜீவ் காந்தி மரணத்தை காரணம் காட்டிகொண்டு இவர்கள் சாக தயாரா? இல்லை அங்கே மடியும் மக்களில் இவர்கள் உடன் பிறந்தோர் இறந்திருந்தால் இதே பதில் சொல்ல தயாரா?

  மறுமொழி
 • 5. tamilselvi  |  1:26 பிப இல் பிப்ரவரி 21, 2009

  ராஜீவ் காந்தி என்ற கழிசடைக்காக தமிழ் இனமே அழிய வேண்டுமா? ஜெ.என். தீக்ஷித், எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற முட்டாள் வெளியுறவு செயலர்களால் தான் ஈழம் இவ்வளவு பாதிப்பினை அடைந்தது. ராஜீவ் ஜெயவர்தன ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு தீக்ஷித்துக்கு ரூபாய்.பத்து கோடி சிங்களர்களால் வெகுமதி அளிக்கப்பட்டது. இப்போது தமிழ் நாட்டில் உள்ள போலி அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய மனைவி, துணைவி, வைப்பாட்டி அவர்கள் மூலம் பிறந்து நூற்றுகணக்கான பிள்ளைகள் ஆகியோர்க்கு, தலா ஆயிரம் கோடி ரூபாயாவது சேர்த்து விட துடிப்பதால் ஈழமாவது மண்ணாவது !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: