Posts filed under ‘பேட்டி’

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு

22.08.2009 தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி

ஓகஸ்ட் 22, 2009 at 9:16 முப பின்னூட்டமொன்றை இடுக

ப.சி.யை எதிர்த்துப் போட்டியிடுவேன்! -சீமான் சிறை பேட்டி!

seeman

மேடைகள்தோறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அனல் பறக்கப் பேசி, பொதுமக்களுக்கு உணர்வூட்டிய இயக்குநர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

புதுச்சேரியில் நடந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திப் பேசியவை இந்திய இறையாண்மைக்கு எதி ராக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட, நெல் லையில் சீமானே முன்வந்து போலீசிடம் கைதானார்.

புதுவைக்குக் கொண்டு வரப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிலையில், பாளை யங்கோட்டையில் அவர் ஏற்கனவே பேசிய பேச்சு களுக்காக என்.எஸ்.ஏ. சட்டம் பாய்ந்திருக்கிறது. சிறைப் பட்டிருக்கும் சீமான் இதை எப்படி எதிர் கொள்கிறார்? எம்.பி. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது வியூகம் என்ன? உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்வதற்காக புதுச்சேரி சிறையில் சீமானை சந்திக்கச் சென்றோம்.

இயக்குநர் தங்கர்பச்சான் உள்பட பலரும் சீமானை பார்க்க இயலாமல் திருப்பியனுப்பப்பட்ட நிலையில், “வாரத்தில் ஒருநாள்தான் சந்திக்க முடியும். இன்று முடியாது’ என நம்மிடமும் கடுமை காட்டியது சிறை நிர்வாகம். இதனையடுத்து, சீமானின் திருநெல்வேலி வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக சீமானை பேட்டி கண்டோம்.

சினிமாதுறையில் இருப்பவர்கள் தங்கள் உழைப் பின் மூலமாக பொழுதுபோக்கு-கேளிக்கைகள் என சொகுசாக இருக்கிறார்கள். நீங்கள் போராட்டம், அதிதீவிரப் பேச்சு என செயல்பட்டு இப்படி சிறையில் கஷ்டப்படு கிறீர்களே?

சீமான்: என் சொந்த ரத்தங்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருக்கும்போது, சொகுசு வாழ்க்கை என்ன வேண்டிக்கிடக்குது!

சிறையில் தனிமையாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சீமான்: வெளியில் இருந்து கையா லாகாத்தனமாக இருப்பதைவிட, உரிமைபேசி கம்பிக்கு பின்னால் இருப்பதே மேல்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி அரசால் கைது செய்யப்பட்ட உங்கள் மீது இப்போது தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட் டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதே?

சீமான்: என்னை சிறைப் படுத்த வேண்டும் என முடிவு செய்தபிறகு, அது என்ன சட்டமானால் என்ன? அரசு அதன் கடமையைச் செய்கிறது. நான் என் கடமையைச் செய்கிறேன். இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இருக்குமளவிற்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் அனைத்து பத்திரிகைகளும் வார இதழ்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன. அதையே நான் மேடையில் பேசினால், அதைப் பொறுக்க முடியாமல் என்னைச் சிறைப்படுத்துகிறார்கள். இதுதான் இங்குள்ள பேச்சு சுதந்திரம்!

ஒவ்வொரு மேடையிலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பேசிவந்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியான சிவ கங்கையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன? ப.சியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா?

சீமான்: தேர்தல் குறித்து நான் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. அது பற்றி என் தமிழ் உறவுகளும், என் பின்னால் இருக்கும் பெரிய மனிதர்களும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் முடிவு செய்தால் போட்டி யிடுவேன். சிறைக்குள் இந்த சீமானை பிடித்துப் போட்டுவிட்டால் பயந்து முடங்கி விடமாட்டான். எங்கு இருந்தாலும் என் குரல் ஒலிக்கும். என் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேரும்.

-காசி

நன்றி நக்கீரன்

மார்ச் 5, 2009 at 6:18 பிப 3 பின்னூட்டங்கள்

என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!

p65”என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!” : சீமானின் கோபம்! -ஆனந்த விகடன் நேர்காணல்.

சீமான்… காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்!

”சிறை அனுபவம்..?”

”வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். ‘சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க’ என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சிறையில் இருந்தது என்னுடைய பேறு!”

”காங்கிரஸ் கட்சி உங்கள் மீது அதிகப்படியான கோபத்தைக் காட்டுகிறதே?”

”அதைவிட அவர்கள் மீது எனக்கு அதிகக் கோபம் இருக்கிறது. சில கல் தொலைவில் என் உறவுகள் கஞ்சிக்குச் செத்து, காட்டுக்குள் தஞ்சம் புகுந்து, எப்போது தலையில் குண்டு விழுமோ என்று தவித்துக்கிடக்கும் சோகத்தை, மேடை போட்டுச் சொல்கிற சீமான் பயங்கரவாதியாம். என் வீட்டு வாசலில் நின்ற காரைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடிய காங்கிரஸ் காரர்கள் மிதவாதிகளாம். நான் பேசும் கருத்து தவறு என்றால், நீயே மேடை போடு. நான் வருகிறேன். பதில் சொல். அதை விட்டுவிட்டு காரைக் கொளுத்துவது, கைது செய்யச் சொல்லி ஈனஸ்வரத்தில் சுப்ரபாதம் பாடுவதெல்லாம் பாரம்பரியக் கட்சிக்கு அழகா?

என் அப்பனும் ஆத்தாளும் காலங்காலமாக ஓட்டுப் போட்ட சின்னம் கை சின்னம். எனக்கு யாரும் தேசியத்தைக் கற்றுத்தர வேண்டியதில்லை. எனது சொந்தங்களில் பலர் எல்லையைக் காக்க நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தேசபக்தியைக் கற்றுத் தரும் காங்கிரஸ்காரர்கள் வீட்டில் எத்தனை பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள்? பட்டியல் தருமா சத்தியமூர்த்தி பவன்? 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத இயலாமையில் புலம்புகிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!”

‘ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?”

”ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?”

”அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?”

”தேவையானதைத்தான் நான் பேசுகிறேன். ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி பேசினால் அமைதிப் படையின் கொடுமைகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். அதை எம் தமிழன் ஏற்பதால்தானே ஆயிரக்கணக்கில் கூடுகிறான்? என் குரலுக்கு மரியாதை இல்லையென்றால், பொருட்படுத்த வேண்டாம். ஏன் ‘கைது செய், கைது செய்’ என்று கத்துகிறீர்கள். என் பேச்சு, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா? எனக்கு அவ்வளவு செல்வாக்கா? காங்கிரஸ் சொன்ன பிறகுதானே எனது பலம் எனக்குத் தெரிகிறது.”

”வெறுமனே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதால் என்ன லாபம் என்கிறார்களே?”

”உணர்ச்சி இருப்பதால் வயப்படுகிறேன். இல்லாதவர்கள் என்னைத் திட்டுகிறார்கள். பேசாமல் எனது பிரச்னையை எப்படிச் சொல்ல முடியும்! இலங்கை ஜனநாயக நாடல்ல, அது மதச் சர்வாதிகார நாடு என்று எடுத்துச்சொல்வது உணர்ச்சிவயப்படுவதா? அறிவும், ஆற்றலும், புலமையும், திறமையும் வாய்ந்த தமிழ்த் தலைவர்களை ஒரு காட்டுமிராண்டி, கோமாளி என்று திட்டும்போது உணர்ச்சியற்ற பிண்டமாக என்னால் இருக்க முடியாது.”

”இலங்கையை மதச் சர்வாதிகார நாடு என்றீர்கள். அங்கு பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று சொல்லி பாரதிய ஜனதா ஆதரவு தெரிவிப்பதை ஏற்கிறீர்களா?”

”நான் சாதி, மதத்துக்கு எதிரானவன். ஆனால், என் இனத்தவன் சாகும்போது அவனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை என்னால் புறந்தள்ள முடியாது. காங்கிரஸ் செய்யத் தவறியதை, இல.கணேசன் சொல்லி வருவது வரவேற்கத்தக்கது.”

‘ஒரு சினிமாக்காரர் தனது படங்களின் மூலம் பேசப்படுவதைத் தாண்டி, அதீத அரசியல் ஆர்வம்கொள்வது சரியா?”

”நான் என் சுயநலத்துக்காகவோ, எனக்கு ஓட்டு கேட்டோ பேசவில்லை. என் இனத்துக்காகப் பேசுகிறேன். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், பிரபாகரனைப் படித்த என்னால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இலங்கை நிலவரங்களை நினைத்தால் கண்மூடித் தூங்க முடியவில்லை. படம் எடுப்பதுதான் என் தொழில். ஆனால், தமிழன் அல்லல்படும்போது படம் எடுத்துக்கொண்டு இருக்க முடியாது. இதையெல்லாம் பேசுவதால் என் தொழில் பின்னடைவு ஆவது உண்மைதான். என் நண்பர்களே என்னிடம் பேசப் பயப்படுகிறார்கள். 32 நாட்களாகப் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. என் உணர்வு அறிந்த தம்பிகள் என்பதால் காத்திருந்தார்கள்.

பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சொந்த ஊரில் ஒரு வீடு கட்டித் தரக் கேட்கிறாள் என் தாய். அண்ணன் பிரபாகரன் நாடு கேட்டுப் போராடுகிறான். என் தாய் வீடு கேட்டுப் போராடுகிறாள். இதற்கு மத்தியில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. சராசரியாக வாழ்ந்து செத்துப் போக விரும்பவில்லை இந்தச் சீமான்.”

”அடுத்த படம்..?”

”சில வாரங்களில் ஆரம்பமாகிறது. பெயர்: சீமானின் ‘கோபம்’!” – சிரித்தபடி முடிக்கிறார் சீமான்!

நன்றி: ஆனந்த விகடன்.

பிப்ரவரி 2, 2009 at 8:03 பிப 5 பின்னூட்டங்கள்

கோடி முறை சிறைக்கு செல்ல தயார் – சீமான்

seeman-jv2

உயிர் போகும் வரை போராடுவேன்!- சீமான்

நான் பேசுவதை நிறுத்த வேண்டுமென்றால் ஒன்று தமிழீழம் அடைந்திருக்க வேண்டும், இல்லையேல் நான் இறந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் சீமான்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ் படுகொலையை விமர்சித்தும் பேசினார் என்ற காங்கிரசார் புகாரின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.

கைதாவதற்கு முன் இயக்குனர் சீமான் விகடன் குழுமத்துக்கு அளித்துள்ள பேட்டி:

”ராமேஸ்வரத்துல பேசினதுக்காக என்னைக் கைது செஞ்சாங்க. என்ன பேசினேன்னு இன்னும்கூட எவனுக்கும் தெரியல. இப்ப பேசினதுக்காக மறுபடி உள்ளே போட்டா, இன்னும் அதிகமாகத்தான் பேசுவேன். நான் என்ன பொம்பள கையைப் பிடிச்சு இழுத்தேனா? கோடி கோடியா மக்கள் பணத்தைக் கொள்ளையடிச்சேனா?.

தமிழ் இன விடுதலைக்காகப் போராடுறேன். அதுக்காக சிறையில போடுறாங்கன்னா, கோடி முறை சிறைக்கு செல்ல தயார். சாக பயந்தவன் தரித்திரம் ஆகிறான். சாகத் துணிஞ்சவன் சரித்திரம் ஆகிறான்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசினதைக் கேட்டு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் கைதட்டினாங்களே… அவங்க மேல என்ன வழக்கு போடுவாங்க? சீமான் பேசுவதை நிறுத்தி விட்டான் என்றால் ஒண்ணு, தமிழ் ஈழம் அடைந்திருக்கவேண்டும்… இல்லை, இந்த சீமான் உயிர் போயிருக்கவேண்டும்.

மும்பை நகருக்குள்ள புகுந்த பயங்கரவாதிகளை அறுபது மணி நேரத்துல அழிச்சுட்டோம். இலங்கையில இருக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னா அவங்களையும் அறுபது மணி நேரத்துல சிங்கள அரசால் அழிச்சிருக்க முடியும்தானே? இல்லை, ஆறு மாசத்துல அழிச்சிருக்கலாம்.

அட… ஆறு வருசத்துலயாவது அழிச்சிருக்கலாம். முப்பத்தாறு வருஷமா போராடிக்கிட்டு இருக்காங்களே. அப்ப அது தீவிரவாத இயக்கம் இல்லை. வலிமையான மக்கள் விடுதலைக்கான ராணுவம்னு உறுதியாகுதே!.

இத்தனை வருஷமா ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்களே… அமைதிப்படை என்ற பெயரில் இரண்டு லட்சம் பேரை அனுப்பினார்களே… அவர்கள் அப்பாவி தமிழர்களைத் தானே அழித்தார்கள். அது அமைதிப்படையில்லை, அநியாயப்படை! அவங்க செஞ்ச ஒரு நன்மையையாவது விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?.

உலகிலேயே பிரபாகரன் போன்ற இன்னொரு வீரன் இல்லை. அதனால்தான், இந்த வீரனை விட்டுவைத்தால் உலகத்திலேயே வலிமை மிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயப்படுகின்றனர். அண்டை தேசத்துல நம் சகோதரர்கள் படுறபாட்டைப் பத்தி பேசறதை தடுக்கற நாடு, என்ன ஜனநாயக நாடு?.

இலங்கையில எல்லா சித்ரவதைகளும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. புலிகள் வசமிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து, அங்கிருக்கற மக்களை வாழவைக்கப் போவதா ராஜபக்ஷே சொல்லிக்கிட்டு இருக்கானே… எல்லாரையும் கொன்னுட்டு பிணங்களையாடா வாழவைக்கப் போற?”

”நீங்கள் விடுதலைப் புலி அமைப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவதாக சுப்ரமணியன் சுவாமி போன்றோர் சொல்கிறார்களே?”

”அவர்கள் எப்படி ராஜபக்ஷேவிடம் பெட்டி பெட்டியாக பணம் வாங்கிக்கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசுகிறார்களோ… அதேபோல், நானும் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!. இந்த அவதூறெல்லாம் என்னை முடக்கிவிடாது!”

நன்றி : ஜீனியர் விகடன்

திசெம்பர் 21, 2008 at 8:16 முப 4 பின்னூட்டங்கள்

காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார் -சீமான்

seemaan-kumudam

ரே நாள் இரவில்  குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. “நாங்கள் பேசியதில் தவறில்லை” என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்தித்தோம். கேள்விகளை முன்வைத்தபோது அவரின் பதில்கள் அக்னியாக வந்து விழுந்தன.

சென்னையில் சினிமா நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

“இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

`அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும்’ என கமல் கூறியது சரியான வார்த்தை. `சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்’ என ரஜினி கூறியதும் சரியானதே. ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணரவேண்டும் என்பதே  என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது.”

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இலங்கைப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

“ஒருங்கிணைந்த இலங்கை மீது இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு அக்கறை எனப் புரியவில்லை. இலங்கையில் தமிழீழம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இந்தியா செயல்படுகிறது. இலங்கையில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை. அப்படியிருக்கையில் இரு தரப்பினரிடையேயும் பேசுவதுதானே நியாயம். ராஜபக்ஷேவையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் ஏன் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களிடமாவது பேசலாமே.

இலங்கையைப் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி கொடுப்பது வழக்கம் தான் என்கிறார்கள். அப்படியானால், பாகிஸ்தானைச் சேர்ந்தவனுக்கும் சீனாவைச் சேர்ந்தவனுக்கும் பயிற்சி கொடுப்பீர்களா? அவர்களுக்குக் கொடுப்பதும் சிங்களனுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான். இலங்கைப் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் ஏன் ராணுவ உதவி செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த ஆயுதத்தை அவன் தமிழனை நோக்கித்தானே பிரயோகப்படுத்துகிறான். செஞ்சோலையில் குழந்தைகள் கொல்லப்பட்டபோது சிறு வருத்தம் கூட இந்தியா தெரிவிக்கவில்லையே. மனிதநேயம் இங்கு மரித்துப் போயிற்றா..?

சொந்த நாட்டில் ஐந்து லட்சம் தமிழ் மக்களை அகதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறது இலங்கை. தமிழர்கள் வாழும் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. அடிப்படைத் தேவைகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதை ஏதும் கண்டிக்காத ஒரு நாடு, எப்படி மனிதநேயம் மிக்க நாடாக இருக்கமுடியும்? பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு  தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.”

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்களே?

“காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட இயக்கம். அப்போது யாரும் பேசவில்லையா? தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்றால், அது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கமுடியும். இந்தியா சர்வாதிகார நாடு எனச் சொல்வீர்களேயானால் நான் ஏதும் பேசாமல் இருக்கத் தயார். ஆனால், இது ஜனநாயக நாடு. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்.”

விடுதலைப்புலிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்களே?

“அவர்கள் போரிடவில்லை. சர்வதேச ராணுவ உதவியுடன் தங்களைத் தாக்கும் இலங்கையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.. `ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால், நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது’ என்பார் பிரபாகரன். அதுதான் உண்மை. தமிழர் பகுதியில் இலங்கை ராணுவம் ஆறாயிரம் முறை குண்டு வீசியிருக்கிறது. ஒவ்வொரு குண்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது. சர்வதேச போர் முறைப்படி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறார்கள்,  கர்ப்பிணிப் பெண்கள், நூலகம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உள்ளது. இதில் எதையும் இலங்கை ராணுவம் கடைப்பிடிக்கவில்லை. இதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஆயுதத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களவன். அதைத் தடுக்க வேண்டுமானால், அவன் பயன்படுத்திய அந்த ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறு எது தீர்வாக இருக்கமுடியும்? அங்கு விடுதலைப்புலிகள் நடத்துவது வீரஞ்செறிந்த அறப்போர். மரணத்தை முன்னிறுத்தி விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், மனிதநேயம் கொண்டவர்கள். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பவர்கள். ஆனையிறவு போரில் நாற்பதாயிரம் சிங்களப் படைவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்தார்கள். இந்தியா  போர் நிறுத்தம் செய்யக் கேட்டுக்கொண்டதால், அவர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை என்றைக்காவது இப்படி மனிதநேயத்தை வெளிப்படுத்தியதுண்டா?”

தமிழீழம் கேட்பதுதானே பிரச்னை?

“தமிழீழம் கேட்பதை யார் தீர்மானிப்பது? அங்கு வாழும் தமிழ் மக்கள்தானே முடிவு செய்யவேண்டும். அவர்களிடம் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தினார்களா? இல்லையே! வாடகைக்கு வந்தவன் வீட்டைக் காலி செய்யமாட்டேன் என்றால் எப்படி பொறுத்துப் போகமுடியும்?”

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகத்தானே கருதப்பட்டு வருகிறது?

“தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களை, உள்நாட்டு போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது. இதற்கு பல நாடுகளும் ஆயுதங்களைத் தருகிறது. கொத்துக்கொத்தமாக ஓர் இனம் மடிய அது உதவுகிறது. இது ஒரு சர்வதேச பயங்கரவாதம். இதைக் கண்டிக்கத் துப்பில்லாத எந்த நாட்டினம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் எனச் சொல்ல அருகதையற்றவர்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். `இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்..’ என காந்தி சொல்வார்.  காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். `உலகின் எந்த மூலையில் ஒரு நாடு விடுதலைக்காகப் போராடுகிறது என்றாலும், அதை இந்தியா ஆதரிக்கும்’ என பிரகடனப்படுத்தினார் நேரு. ஆனால் இந்தியா ஏன் தமிழீழ விடுதலையை ஏற்க மறுக்கிறது எனத் தெரியவில்லை.”

உண்ணாவிரதத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது எனக் கூறியிருக்கிறாரே?

“எஸ்.வி. சேகரை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களை எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே… அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் சேகர். குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது சேகர் கேட்டிருக்கலாமே. அவருக்குப் புரிதல் அவ்வளவு தான்..”

சிறையில் இருந்த அனுபவம்..

“விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்த பணி அது. சிக்கல் வரும் எனத் தெரியும். அதற்காகச் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் இருந்தால் என்னை என் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது…” என ஆவேசத்தோடு முடித்துக்கொண்டார் சீமான்.

நன்றி : குமுதம் 09.11.08

நவம்பர் 7, 2008 at 11:37 முப 12 பின்னூட்டங்கள்

நான் இப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன் -திருமா

thiruma

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அவர் தீவிரமாக ஆதரித்துப் பேசுவதற்கு எதிராக, காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடும் அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் நாம் திருமாவளவனைச் சந்தித்தோம்…

விடுதலைப் புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி?

“கைது, சிறை ஆகியவற்றிற்கு அஞ்சி நியாயத்தைப் பேசத் தவறினால் மனிதனாக இருப்பதில் பொருள் இல்லை. கொடுமையைக் கண்டு குமுறாமல், அநீதிக்கு எதிராக ஆத்திரப்படாமல், சட்டத்திற்காகவும், சிறைக்காகவும் பயந்து நடுங்கி உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லத் தயங்கும் கோழைத்தனத்தை நான் கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையே தேவையில்லை என நினைப்பவன் நான். இன்று நேற்றல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாகவே விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் நான் ஆதரித்தே வருகிறேன். அந்த நிலைப்பாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் நான் மாற்றிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் புலிகளோடு ஆயுதம் ஏந்திப் போராட முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கிருக்கிறதே ஒழிய, ஆதரித்தால் கைது செய்வார்களே என்ற அச்சம் சிறிதும் இல்லை.

இங்கே விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சில தலைவர்கள் வரலாற்றை அறிந்துகொள்ள, தெரிந்து கொள்ளத் தவறியதால், அல்லது தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதால் அப்படி எதிர்க்கிறார்கள் என்பதே என் கருத்து. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ள மலையகத்தில் தேயிலைத் தோட்ட வேலைக்காக தாய்த் தமிழகத்திலிருந்து தமிழர்கள் பல லட்சம் பேர் கப்பல் ஏற்றப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் அங்கே உள்ள சிங்கள அரசு மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும்கூடத் தரவில்லை. மறுத்தது. கொத்தடிமைகளாகவே பார்த்தது. `இந்த மண்ணிலேயே நூற்றாண்டுகளாக வாழும் மலையகத் தமிழனுக்கு எல்லா உரிமைகளையும் கொடு’ என்று கேட்டுப் போராடினார் ஈழத் தந்தை செல்வா. பிரச்னையே அங்கிருந்துதான் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

இன்றும்கூட அங்கே சுமார் நான்கு லட்சம் மலையகத் தமிழ் மக்கள், அதாவது தாய்த் தமிழகத்து வம்சாவழிகள் ஓட்டுரிமையும், குடியுரிமையும் இல்லாமல்தான் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதற்காக இங்கே `எதிர்ப்பு’ப் பேசும், தலைவர்கள் யாரும்வெட்கப்படவில்லை. 

வேதனைப்படவில்லை. இந்திய பிரஜைகளின் வம்சாவழித் தமிழர்களை சிங்கள அரசு இன்றைக்கும் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறதே என்று வெட்கப்பட வேண்டாமா? தேசப் பற்றாளர்களாக நடிக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் சிலர் இதில் வெட்கப்படாமல் இருப்பது ஏன்? இந்த நியாயத்தைத்தான் நான் எடுத்துச் சொல்கிறேன். கேட்கிறேன்.”

வன்முறையாளர்களான புலிகளை ஆதரித்து நியாயம் பேசுவது சரியா என்பதுதானே சில காங்கிரஸாரின் குற்றச்சாட்டு?

“வன்முறை எது, விடுதலைப் போராட்டம் எது என்ற வித்தியாசம் தெரியாத தலைவர்களைப் பற்றி என்ன கூறுவது? கோழிக்குஞ்சு ஒன்றை பருந்து தன் இரைக்காக தூக்கிச் செல்வது வன்முறை வெறியாட்டம். தன் குஞ்சை மீட்க கோழி நடத்தும் எதிர்ப் போராட்டம் விடுதலைக்கான போராட்டம். அங்கே சிங்கள அரசு நடத்துவதுதான் வன்முறை வெறியாட்டம். ஈழ மக்கள் என்ற கோழிக்குஞ்சை மீட்க புலிகள் நடத்துவது விடுதலைக்கான போராட்டம். இதை நான் ஆதரிக்கின்றேன். `கைது செய்’ என்ற குரலுக்கு அஞ்சி என் நிலைப்பாட்டை என்றுமே மாற்றிக்கொள்ள மாட்டேன்.”

ஏதோ சிலர் அல்ல; உங்கள் கூட்டணியிலேயே உள்ள காங்கிரஸாரும், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தலைமையும்தான் உங்களைக் கைது செய்யச் சொல்கிறார்கள்…

“தமிழக மக்களிடமே ஓட்டு வாங்கி, பதவியில் அமர்ந்துகொண்டு அந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இனத்திற்கும், மொழிக்கும் துரோகியாக நிற்கிறார்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் தி.மு.க.வை நிர்ப்பந்திப்பது. நெருக்கடிக்குள் தள்ளுவது. அதற்கு திருமாவளவனைப் பயன்படுத்துகிறார்கள்.

என்னைக் கைது செய்ய வைப்பதன் மூலம் தி.மு.க.விற்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பிளவை ஏற்படுத்திவிட முடியும் என கனவு காண்கிறார்கள். அது ஒரு காலமும் நடக்காது.

இன்னொன்று… காங்கிரஸார் என்று கூறுகிறீர்கள். எந்த காங்கிரஸ் என்று கூறவேண்டும். இங்கே `அம்மா’ காங்கிரஸும் இருக்கிறது. அன்னை சோனியா தலைமையில் உள்ள காங்கிரஸார் ஏதும் கூறவில்லை. ராஜீவ் கொலையாளிகளையே `மறப்போம். மனிதநேயத்தைக் காப்போம்’ என்று பெருந்தன்மையோடு மன்னித்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கருத்துக் கூறியவர்தான் அன்னை சோனியா. அவரே அப்படி இருக்கும்போது, இங்குள்ள சிலர் காங்கிரஸ் என்ற போர்வையில் ராஜீவ் படுகொலையையே இன்னமும் கூறிக்கொண்டிருந்தால் என்ன பொருள்? `அம்மா’ காங்கிரஸுக்கான பணியைச் செய்கிறார்கள். அ.தி.மு.க.வின் அரசியல் காய் நகர்த்தலுக்கு ஆதரவாகவும், டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்றே பொருள்.

அடுத்து, அ.தி.மு.க. பற்றிக் கூறவேண்டும். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. என்பது ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகவே இருந்தது. ஆனால் இப்போது இருப்பது `அம்மா’ அ.தி.மு.க. `அம்மா’வின் நிலைப்பாடு ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரானது. குறிப்பாக ஒரு தமிழனான பிரபாகரன் உலகம் போற்றும் மாவீரனாக எழுந்து நிற்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு ராஜீவ் படுகொலையை முன்னிறுத்தி புலிகளை எதிர்ப்பதாகச் சொல்கிறார். நான் கேட்கிறேன், அமரர் ராஜீவ் காந்தி என்ன அ.தி.மு.க.விற்குத் தலைவராகவா இருந்தார்? ராஜீவின் மனைவியும், புதல்வர்களுமே அதை மன்னித்த பிறகு `அம்மா’ ஏன் அதையே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? சில காங்கிரஸாருக்கும், `அம்மா’விற்கும் சொல்வது இதுதான். ஓர் இனத்திற்கான விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்து தமிழினத்தின் துரோகிகளாக மாறிவிடாதீர்கள்!”

காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வும் கூட ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறார்கள். அந்த வகையில் சிங்கள அரசை எதிர்க்கிறார்கள். விடுதலைப் புலிகளைத்தான் வன்முறை இயக்கம் என எதிர்க்கிறார்கள். புலிகள் மூலமான ஈழ விடுதலை சரியானதல்ல என்கிறார்களா?!

“அப்படிக் கூறுவது அவர்களின் `அரசியல் அறியாமை’ அல்லது மோசடி, ஏமாற்று நாடகம் என்றே கூறுவேன். அங்கே புலிகள் வேறு, ஈழ மக்கள் வேறு அல்ல. உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமும் புலிகளைப்போன்று இத்தனை காலமும் தாக்குப்பிடித்து நின்றதில்லை. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் இன்று வரையிலும் அவர்களால், பன்னாட்டு ஆயுதக்குவியலோடு போரிட்டு வரும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நிற்கமுடிகிறது. தனி ஈழம் என்பது விடுதலைப் புலிகளின் வயிற்றில் சுமக்கும் கரு. அதை அவர்கள்தான் பிரசவித்தாக வேண்டும். அவர்கள் மூலமே அந்த விடுதலை கிடைத்தாக வேண்டும்.

இவர்கள் இங்கே மக்களை ஏமாற்ற, `ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறோம். புலிகளை எதிர்க்கிறோம்’ என்கிறார்கள். ஈழ விடுதலையை யார் வாங்கித் தருவார்கள்? அ.தி.மு.க.வும், `சில’ காங்கிரஸாருமா? அப்படிச் சொல்லட்டும். நாங்கள் அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறோம்.”

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் `இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட்டு வற்புறுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் அப்படியே உள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறதே? கலைஞர் இதில் மெத்தனமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன?

“சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் எப்படிப்பட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் அவரது வேகம் என்பது வேறு. அரசு எந்திரமாகச் செயல்படுவது என்பது வேறு. கலைஞரின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் இப்போது மத்திய அரசு அசைந்துள்ளது. `தாமதம்’ என்ற காரணத்தைக் கூறி `சொன்னபடி எம்.பி. பதவிகளை வாபஸ் வாங்கினால், காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு ஏற்படும். பிறகு யாரிடம் போய் `செய்யுங்கள்’ என்று கேட்க முடியும்? அதனால்தான் தாமதமாகக் காய் நகர்த்துகிறார் எனத் தெரிகிறது. அவர் நினைத்ததைச் செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.”

இலங்கைத் தமிழர்களுக்கான நிதிவசூல் என்பது `போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வது, பின்னுக்குத் தள்ளுவது என்ற எதிர்ப்புக் குரலுக்கு என்ன சொல்கிறீர்கள்?

“ஆமாம். இது திட்டமிடப்பட்டே, உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த பெரிய கொந்தளிப்பு இப்போது கொஞ்சம் அடங்கி விட்டதாகவே படுகிறது. இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்கு அப்பாவி மக்கள் பலியாவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற போர்க்குரல் மங்கி, இப்போது எங்கு பார்த்தாலும் `நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள்’ என்ற குரலே எதிரொலிக்கிறது. அங்கே போரை நிறுத்தாமல், நிதி வசூல் செய்தும் பயன் இல்லை. குண்டு மழைகளுக்கிடையேவா `போய்ச் சாப்பிடுங்கள், மருந்திட்டுக் கொள்ளுங்கள்’ என்று கொடுக்க முடியும்? ஆகவே முதலில் `போர் நிறுத்தம்’ என்பதுதான் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியது. முதல்வரிடம் நாங்களும் அதை எடுத்துக் கூறி வருகிறோம்.”

இலங்கையிலிருந்து இங்கே தூதுவராக வந்து சென்ற பசில் ராஜபக்சே, `போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று என்னிடம் இந்திய பிரதமர் ஏதும் கூறவில்லை’ என்றே கூறியிருக்கிறார். ஆக உங்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை `மத்தியில்’ கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை என்பதுதானே பொருள்?

“அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையிருக்கும் பட்சத்தில் மத்திய அரசு தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதாகத்தான் அர்த்தம். தமிழக முதல்வர் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்வார் என நம்புகிறோம். சிங்களவர்களுக்கு ஆயுதம் கொடுத்துஉதவுவதில் காட்டிய மத்திய அரசின் வேகம், போர் நிறுத்தத்திலும் இருக்க வேண்டும்.”

இலங்கை அரசுக்கு நாங்கள் ஆயுதம் ஏதும் கொடுக்கவில்லை என்கிறாரே மத்திய அமைச்சர்?

“ஆயுதம் கொடுத்தால்கூட பரவாயில்லை. ஏதோ அண்டை நாட்டிலுள்ளவர்களுக்கு உதவி மனப்பான்மையில் செய்கிறார்கள் எனலாம். ஆனால் மத்திய அரசு அதைவிட பல படிகள் மேலே சென்று உதவியிருக்கிறது. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்த்தால், இலங்கையின் முப்படைகளுக்கும் எந்தெந்த விதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் இருக்கிறது. இன்றைக்கு அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது குண்டுவீசும் விமானங்களை ஓட்டுவதே இந்திய ராணுவம்தான் என்ற செய்தியும் இருக்கிறது. மிக நவீன வசதிகள் கொண்ட அந்தப் போர் விமானத்தை அவ்வளவு எளிதில் இயக்க முடியாது. அதிகப் பயிற்சிகள் தேவை. அப்படிப்பட்ட அனுபவம் இந்திய ராணுவத்திடம்தான் இருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உதவியதோடு, நமது வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை சிங்களத்தவனுக்கு தூக்கி ஓசியில் கொடுத்துள்ளார்கள். ஒரு விதத்தில் பார்ப்பதென்றால் இது சிங்கள அரசு நடத்தும் போர் அல்ல. அவர்கள் மூலமாக இந்திய ராணுவம் நடத்தும் போர் என்றுதான் கூற வேண்டும்.”

`தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் திருமாவளவனை முதல்வர் கருணாநிதி கைது செய்யாததன் `நோக்கம்’ என்ன? அவரும் புலிகள் ஆதரவாளர் என்பதுதானே’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவது பற்றி?

“முதலில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையே நான் எதிர்க்கிறேன். மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்த பிறகு தடை செய்யட்டும் என்பதே எமது கோரிக்கை. அடுத்தது, நான் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த சமயத்தில் இலங்கைக்குச் சென்று வந்தேன். `வன்னி’ பகுதி எல்லாமும் பார்த்துவிட்டு அங்கிருந்து ராணுவப் பொறுப்பிலுள்ள யாழ் மாவட்டத்திற்குள் நுழையும் வரை பெண் புலிகள்தான் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு இலங்கை ராணுவம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. திரும்பி வந்தது முதல் எல்லாமும் `அம்மா’விற்குத் தெரியும். அப்போது `பொடா’ சட்டமும் இருந்தது. முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் எந்தக் காரணத்திற்காக என்னை அப்போது கைது செய்யாமல் விட்டு வைத்தாரோ, அதே காரணம்தான் இப்போது கலைஞருக்கும் இருக்கும்.”

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் சிக்கிய வன்னி அரசுவை உடன் வைத்துக் கொண்டே முதல்வரைச் சந்திக்கிறீர்கள் என்பதுதானே முக்கிய குற்றச்சாட்டு!

“வன்னி அரசு எமது கட்சியின் நிர்வாகி. அவரை உடன்வைத்துக் கொண்டிருக்காமல் வேறு யாரை வைத்துக் கொள்வது? மேலும் அவர் `ஆயுதம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டே ஆதாரமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டு.  அவருக்குத் தெரிந்த மீனவர்களுக்கு படகு மோட்டார் இன்ஜின் தேவைப்பட, அதை தனக்குத் தெரிந்த வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். இயந்திரப் படகு மோட்டார் வந்தது. அவ்வளவுதான். வேறு எந்த ஆயுதத்தைக் காட்டினார்கள்? எதுவும் இல்லையே! பொதுவாகவே, இங்கிருந்து புலிகளுக்கு ஆயுதக் கடத்தல் என்பது சிரிப்பான ஒன்று. விடுதலைப்புலிகள் ஆயுத விஷயத்தில் எங்கேயோ இருக்கிறார்கள். சிங்களப் படைகளிடம் பிடித்த நவீன ஆயுதங்களே அவர்களிடம் நிறைய இருக்கிறது. நானோ, வன்னி அரசுவோ கடத்த வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.”

வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் கைது சரியானதென்று கருதுகிறீர்களா?

“என்னைப் பொறுத்தவரையில் அது தேவையற்ற கைது என்றே கருதுகிறேன். கைது செய்திருக்கக் கூடாது. புலிகள் இயக்கத்தை எதிர்த்துப் பேச என்ன கருத்துரிமை இருக்கிறதோ, அதே கருத்துரிமை ஆதரித்துப் பேசுபவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக இயக்கம்கூட்டி, ஆயுதம் சேகரித்து, அந்தத் தலைமைக்கு `தலைவர்’ என்று கூறிக் கொண்டவர்கள் அல்ல. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை.”

நன்றி குமுதம் ரிப்போட்டர்

நவம்பர் 5, 2008 at 10:35 பிப 6 பின்னூட்டங்கள்

ஈழமக்களின் விடுதலை நாளே எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்

மதுரை நடுவண் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவரும் இன்று பிணையில் விடுதலையாகி வெளியே வந்தனர்.

அவர்களை இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 19-ந் தேதி இராமேசுவரத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய இறையாண் மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தும் பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீரை இராமநாதபுரம் Q பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மதுரை நடுவண் சிறைச்சாலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரின் சார்பில் பிணை கேட்டு கடந்த 28-ந் திகதி இராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 3.30 மணியளவில் இந்த மனு நீதிபதி மாயாண்டி முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இருவரின் பேச்சால் சமுதாயத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடவில்லை. எனவே இரண்டு பேரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை தருமாறு கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு நபர்  பிணை செலுத்தும்படியும்,  நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, இருவருக்கும்  பிணை வழங்கினார். மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் மதுரை ஒன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு  கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தார். பிணை உத்தரவு நேற்று இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகிய இருவரும் சிறையி லிருந்து விடுதலை ஆனார்கள். மதுரை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த அவர்கள் இருவரையும் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தோழர்கள் ஆகியோர் வரவேற்றனர். சிறையிலிருந்து வெளியே வந்த சீமானும், அமீரும் இந்த பிரச்சனையின் போது, தங்களுக்கு பின்னால் நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று தெரிவித்தனர்.

மதுரை சிறையிலிருந்து நாங்கள் விடுதலையானது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று நினைத்தால் அது தவறு. எப்பொழுது ஈழமக்கள் விடுதலை அடைவார்களோ அன்றுதான் எங்களுக்கு மகிழ்ச்சி என்று இயக்குநர்கள் இருவரும் கூறினார்கள்.

பிணையில் விடுதலையான இருவரும் விரைவில் வழக்கில் இருந்தும் விடுதலையாவார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குனர் சீமான் இளையான்குடியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து மதுரை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போடுவார். அதே போன்று மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்கும் அமீரும் நீதிமன்றத்தில் கையெழுத்திடுவார்.

ஒக்ரோபர் 31, 2008 at 5:11 முப பின்னூட்டமொன்றை இடுக

தங்கபாலு மீது சீமான் பாய்ச்சல்; விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதா?

மாலைமலர்-
சென்னை, அக். 23-

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து டைரக்டர் சீமான் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும். சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.

இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?

நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம். பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.

எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

ஒக்ரோபர் 23, 2008 at 9:15 முப 10 பின்னூட்டங்கள்

அண்ணன் பிரபாகரன் வருத்தம்

ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான்.

“ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்’ என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன.

அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ம.தி.மு.க.வும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்ததும், மருத்துவர் அய்யா ராமதாஸ் என்னைத் தொடர்பு கொண்டு, `ஈழத் தமிழர்களுக்காக வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்து கூட்டத்தில் பங்கேற்கச் சொல்லவேண்டும்’ என்று கூறினார்.

உடனே, நான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்க முயற்சி செய்தேன். அவர் மதுரையில் கட்சி நிதியளிப்பு விழாவில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதனால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, தமிழ் இனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரே மையத்தில் இணைய வேண்டும் என்பதுதான் அண்ணனின் (பிரபாகரன்) ஆசை.

தமிழ் ஈழத்தின் கதவு மூடப்பட்டுள்ளது. அதனுடைய திறவுகோல் ஒவ்வொரு தமிழனிடத்திலும் உள்ளது. எனவே, நாம் ஒன்றுபட்டுத் திறக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

இலங்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தமிழன் மரணத்தைச் சந்தித்து வருகிறான். உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டுவருகிறான்.

இந்த நிலையில், தாய்த் தமிழகத்தில் இருந்து என்ன முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்து வருவதாக அங்கிருந்து தகவல் வருகிறது. ஆனால் இங்கோ, தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன.

அ.தி.மு.க. புறக்கணித்ததில் வியப்பு இல்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைக்காக. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் தேவை என்ற நிலைப்பாடு கொண்டவர் அண்ணன். குறிப்பாக, ஆளும்கட்சியின் ஆதரவை எப்போதும் எதிர்பார்ப்பார்.

ஜெயலலிதா ஆட்சியின்போதுகூட, `அவர் ஏன் நம்மை வெறுக்கிறார்? நமது விடுதலைப் போராட்ட உணர்வை ஜெயலலிதாவிற்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்!’ என்கிற ரீதியில்தான் பேசுவாராம். ஜெயலலிதாவிற்கு எதிரான நிலையை அண்ணன் பேசமாட்டாராம்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தானே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஏதாவது உதவ முன்வரும். இல்லையெனில், தேர்தல் கூட்டணிக் கணக்கை வைத்து காய் நகர்த்திச் சென்றுவிடும்.

தமிழகத்தில் ஒகேனக்கல் பிரச்னை, காவிரி பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் மொழி, இனங்களைக் கடந்து தமிழர்களுக்காக ஒன்று திரண்டனர். தற்போது ஈழத் தமிழர்களுக்காக வரும் 19-ம் தேதி ஒன்று திரள்கின்றனர். இவர்களைப் போல், அரசியல்வாதிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுதிரண்டிருக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் டாக்டர் அய்யா தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார். ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர அவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையா? நடிகர் சரத்குமார் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதுபோல், அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் புறக்கணிப்புக்குக் கூறிய கருத்தைக் கூட கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குதான் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், உலகிலுள்ள எல்லா நாடுகளும் நம்மை திரும்பிப் பார்த்திருக்கும்!” என்றார் சீமான்.

நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்

ஒக்ரோபர் 22, 2008 at 12:51 பிப 3 பின்னூட்டங்கள்


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 52,878 பார்வைகள்